Sunday, December 20, 2009

அகதிகள் முகாமின் அவலம்.

















சென்னைக்கு
அருகேயுள்ள கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் குடிநீர், சுகாதாரம், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசிதிகள்கூட இல்லாத நிலையில் பெரிதும் அவதிப்படுகின்றனர் அங்கு வசிக்கும் இலங்கைத் தமிழர்கள்.

தமிழகத்தின் மிகப் பெரிய முகாமாக 1990-ல் தொடங்கப்பட்ட இம் முகாமில் 1000 குடும்பங்களைச் சேர்ந்த 3,947 பேர் வசித்த போதும் அவர்களுக்கு எந்தவித வசதிகளும் முறையாக செய்துதரப்படவில்லை.

முகாம் தொடங்கிவைக்கப்பட்ட போது, அரசால் கட்டிக் கொடுக்கப்பட்ட 500 குடியிருப்புகள் 5 ஆண்டுகளுக்குள் முற்றிலும் சேதமடைந்துவிட்டன. அதற்கு பிறகு அவற்றைச் சீரமைக்கவோ, புதிதாகக் குடியிருப்புகள் கட்டவோ எந்தவித முயற்சியையும் அரசு மேற்கொள்ளவில்லை.

இதனால், இங்குள்ளவர்கள் தங்களது சொந்த செலவிலேயே குடிசைகளை புதுப்பித்துக் கொண்டனர்.

ஈழ ஏதிலியர் மறுவாழ்வு சங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட பள்ளியில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை 514 குழந்தைகள் படித்து வந்தபோதும் அரசுத் தரப்பில் இப் பள்ளிக்கு எவ்வித உதவியும் இல்லை. இம் முகாமில் 12-ம் வகுப்பு வரை படித்த 12 இளைஞர்கள் மாதம் ரூ.500 ஊதியத்தில் ஆசிரியர்களாகப் பணிபுரிகின்றனர்.

இப் பள்ளியை அரசு தனது பொறுப்பில் ஏற்றுக்கொண்டால், குழந்தைகளுக்கு மதிய உணவு, இலவசப் புத்தகம் உள்ளிட்ட அரசின் சலுகைகள் அனைத்தும் கிடைப்பதோடு, நிரந்தர ஆசிரியர்கள் மூலம் தரமான கல்வியும் கிடைக்கும் என்றார் முகாமைச் சேர்ந்த சாந்தி.

முகாமில் உள்ள 5 ஆழ்துளை கிணறுகளில் 2 பழுதடைந்துள்ளன. மேலும், மின்விநியோகமும் அடிக்கடி தடைபடுவதால் குடிநீர் சீராக வருவதில்லை என்றும், இரவு 8 மணிக்குமேல் தான் குடிநீரைப் பெறும் நிலை உள்ளதாகவும் வருத்தப்படுகிறார் கண்ணன்.

குண்டும், குழியுமான சாலைகள் சீரமைக்கப்படவில்லை. சாலையோரங்களில் திறந்தவெளி சாக்கடை காணப்படுவதால் மழைக் காலங்களில் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:

""முகாம் பகுதியில் மின்கோளாறை சீரமைக்க கூடுதலாக மின்மாற்றி அமைக்க ரூ.70,000 மின்வாரியத்துக்கு செலுத்தவேண்டியுள்ளது. இதற்கு ஆவன செய்ய மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. விரைவில் இதற்கு தீர்வு காணப்படும்'' என நம்பிக்கை தெரிவித்தார்.

"அத்திப்பூ பூத்தாற் போல மின்விநியோகம்'

""மின்விநியோகமும் அத்திப்பூ பூத்தாற் போல எப்போதாவதுதான் வரும்; மாலையில் மண்ணெண்ணெய் விளக்குகள்தான் எங்கள் வீடுகளில் நிரந்தரத் துணை என்கின்றனர்'' இங்குள்ள மக்கள்.

இரவு நேரத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பெரிதும் பாதிக்கப்படுவதாக இளைஞர் மூர்த்தி தெரிவிக்கிறார்.

2 மாதங்களுக்கு முன்னர் புதிதாக மின் கம்பம் நட்டு, மின்மாற்றி நிறுவப்பட்ட போதும், இதுவரை இணைப்பு கொடுக்கப்படவில்லை என, முகாமைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment