Sunday, December 20, 2009

தமிழ்நாட்டோடு எங்கள் பகுதிகளை சேர்த்துக் கொள்ளுங்கள் எல்லையோர 9 ஆந்திர பஞ்சாயத்தினர் கோரிக்கை


கும்மிடிப்பூண்டி அடுத்த தமிழக எல்லையோரத்தில் உள்ள ஆந்திரப் பகுதிகளான ராமாபுரம், பெரியவேடு, பீமார்பாளையம்,காரூர், பூண்டி, தடா, தடா கண்டிகை, இருக்கம், வேநாடு போன்ற பஞ்சாயத்துகளை சேர்ந்தவர்கள் தாங்கள் ஆந்திராவில் இருந்தாலும், இப்பகுதியில் உள்ள அனைவரும் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் என்பதால் தங்களை தமிழகத்தோடு இணைத்துக் கொள்ளும்படி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தை பிரித்து தெலுங்கானா என்ற தனி மாநி்லமாக பிரிக்க வேண்டும் ஒரு சாராரும், பிரிவினை கூடாது என்று மற்றொரு பிரிவினரும் ஆந்திராவில் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் தமிழக எல்லையோரத்தில் உள்ள ஆந்திர பகுதியில் உள்ள 9 பஞ்சாயத்தினர் ஆந்திராவில் தெலுங்கை தாய்மொழியாக பேசும் ஒரு பிரிவினரே தனி மாநி்லம் கேட்கும் போது தமிழை தாய்மொழியாக கொண்ட தங்களை தமிழகத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற தங்களின் நியாயமான கோரிக்கையை இரு மாநில அரசுகளும் ஏற்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பியுள்ளனர்.

இது குறித்து வழக்கறிஞரும் ஆந்திர பகுதியான ராமாபுரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் வி.என்.கிருஷ்ணனை தெரிவிக்கையில் மேற்கண்ட 9 பகுதியிலும் 100 சதவீதம் சுமார் 30 ஆயிரம் தமிழர்கள் வசித்து வருகின்றனர். மேற்கண்ட பகுதிகள் வேங்கடகிரி அரசரின் சமஸ்தானத்தை சேர்ந்தாக இருந்த வரை இப்பகுதிகள் தற்போதைய திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த பொன்னேரியை தாலுக்காவாக கொண்டிருந்தது. 1956ஆம் ஆண்டு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது மேற்கண்ட தமிழ் மொழியை பேசும் பகுதிகள் இப்பகுதி மக்களின் விருப்பத்திற்கு மாறாக வேங்கடகிரி அரசரின் விருப்பத்தின் பேரில் ஆந்திராவோடு இணைக்கப்பட்டது.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கண்ட பகுதிகள் ஆந்திர மாநிலத்தை சேர்ந்ததாக இருந்தாலும் நாங்கள் அனைவரும் தமிழை தாய்மொழியாக கொண்டிருக்கிறோம். எங்கள் உற்றார் உறவுகள் அனைவரும் தமிழக பகுதியிலேயே தான் இருக்கும் நிலையில் நாங்கள் மட்டும் ஆந்திராவில் இருந்து அவதிப்படுகிறோம். தமிழக பகுதிகளுக்குள் தான நாங்கள் பெண் கொடுத்து பெண் எடுக்கிறோம், நாங்கள் அனைவரும் இன்றளவும தமிழ் நாட்டு பளளி, கல்லூரிகளில் தான் படித்து வருகிறோம். இப்படி தமிழகத்தோடு எல்லாவிதத்திலும் சம்பந்தப்பட்டு நாங்கள் இருந்தாலும் ஆந்திர மாநிலத்தவர் என்று நாங்கள் பிரிக்கப்படுவதோடு நாங்கள் இங்கு எல்லா விதங்களிலும் பின்தங்கி உள்ளதால் எங்களை தமிழகத்தோடு இணைத்துக் கொள்ள தமிழக அரசு ஆந்திர அரசை கேட்டுக் கொள்ள வேண்டும் என்றார்.

நெல்லூர் மாவட்ட கவுன்சிலரான பூண்டி பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் கூறுகையில் மேற்கண்ட 9 பஞ்சாயத்துகளை சேர்ந்த பெரும்பான்மையானவர்களுக்கு தமிழில் மட்டுமே பேச,எழுத தெரியும். தமிழக கல்லூரியி்ல் எம். படித்த பட்டாதாரியால் அவருக்கு தேவைப்படும் ஒரு சான்றிதழுக்காக ஆந்திர தாலுக்கா அலுவலகத்தில் விண்ணப்பிக்க தெரியாது.

அதே போல இங்கு பஞ்சாயத்து தலைவராகவும், மாவட்ட கவுன்சிலர்காவும் பதவி வகிக்கும் அனைவருக்கும் தெலுங்கு எழுத, படிக்க தெரியாததால் அரசு சார்பாக திட்டங்களை மக்களிடம் விளக்கவோ, கூட்டங்களில் அதிகாரிகள் என்ன கூறுகிறார்கள் என்பதை அறியாதவர்களாய் இருக்கிறார்கள். இதனால் அதிகாரிகள் அளவிலான கூட்டங்களில் மேற்கண்ட பகுதிகளை சோ்ந்த மக்கள் பிரதிநிதிகள் அவமானங்களை சந்திக்க நேர்கிறது. எனவே மேற்கண்ட பகுதிகளை தமிழகத்திலேயே சேர்ப்பது குறித்ததான தங்களின் கோரிக்கைக்கு தமிழகத்தை சேர்ந்த அனைத்து கட்சிகளையும் சேர்ந்தவர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றார்.

ராமாபுரம் பகுதியை சேர்ந்த ராமர் கோவில் தர்மகர்தாவான பட்டதாரி ராகவன் இது குறித்து தெரிவிக்கையில் ஆந்திரப்பகுதிகளான இங்கு தெலுங்கு பள்ளிகள் இருந்தாலும் அதிகமாக யாரும் படிப்பதில்லை சுமார் 4000 மக்கள் தொகை கொண்ட ராமாபுரத்தி்ல் 1-7 வகுப்புகள் வரை உள்ள தெலுங்கு பள்ளிக்கூடத்தில் வெறும் 50 மாணவர்களும், பீமளவாரிபாளையம் பள்ளியில் 1-7 வகுப்புகளில் 60 மாணவர்களும், 6000 மக்கள் தொகை கொண்ட காரூர் பள்ளியில் 40 மாணவர்களும் படித்து வரும் நிலையில், பனங்காடு,பெரியவேடு பகுதிகளில் மாணவர்கள் இன்மை காரணமாக தெலுங்கு பள்ளிகள் மூடப்பட்டன என்றார்.

மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆரம்பாக்கம், மாதர்பாக்கம், கும்மிடிப்பூண்டி, கவரப்பேட்டை, பொன்னேரி பகுதிகளில் பள்ளிக் கல்வியையும், பொன்னேரி, சென்னைப் பகுதியில் கல்லூரி கல்வியையும் கற்கின்றனர். ஆனாலும் தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு அதற்குரிய சான்றிதழ் ஆந்திராவில் வழங்கப்படாததால் தமிழக பள்ளிகளில் மாணவர்களுக்கு உரிய சலுகைகள் பெற முடிவதில்லை, அதே போல தெலுங்கு பள்ளிகளில் தமிழை ஒரு பாடமாக வைக்க தாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் ஆந்திரா கல்வி துறையால் நிறைவேற்றப்படவில்லை என்று வேதனைப்பட்டார் ராகவன்.

சென்னையில் முதுகலை பட்டப் படிப்பு முடித்த காரூர் பகுதியை சேர்ந்த நீலகண்டன் தெரிவிக்கையில் மேற்கண்ட பகுதிகளில் தமிழக கல்லூரிகளில் படித்த 100க்கும் மேற்பட்ட பட்டாதாரிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு தெலுங்கு பேச, எழுத தெரியாத காரணத்தால் அவர்களுக்கு ஆந்திராவில் அரசு வேலை கிடைப்பதில்லை. தமிழகத்திலும் அவர்கள் ஆந்திர மாநிலத்தவர்களாக பாவிக்கப்படுவதாலும் இங்கும் வேலை வாய்ப்பு மறுக்கப்படுவதால் வேலை வாய்ப்பின்றி இந்த பட்டதாரிகள் இரு தலைக் கொள்ளி எரும்பாய் தவிக்கின்றனர் என்றார்.

தடா பகுதியை சேர்ந்த முன்னாள் மாவட்ட கவுன்சிலரான உத்தண்டி சுப்பிரமணியம் குறிப்பிடுகையில் மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது மேற்கண்ட 9 ஊராட்சிகளை சேர்ந்த சுமார் 25க்கும் மேற்பட்ட தமிழ் பேசும் மக்களை கொண்ட கிராமங்களை ஆந்திராவோடு இணைத்து இம்மக்களுக்கு அநீதி இழைத்துள்ளனர். இன்று அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில், கல்வி, வேலை வாய்ப்பு என்ற அனைத்து வழிகளிலும் சிரமப்படும் தங்களின் நிலை மாற மேற்கண்ட பகுதிகளை தமிழகத்தோடு இணைத்துக் கொள்ள வேண்டும், அதற்கு மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும் என்றார்.

பீமளாவாரிபாளையம் பஞ்சாயத்து தலைவரான மனோகரன் தெரிவிக்கையில் சென்னையை தாண்டி கும்மிடிப்பூண்டி அடுத்து எளாவூரை தாண்டியதும் சுமார் 6 கி.மீ தொலைவுக்குள் பனங்காடு, ராமாபுரம், பெரியவேடு, வெங்கடாதிரி பாளையம் போன்ற ஆந்திர பகுதிகள் வந்து அதனை தாண்டினால் ஆரம்பாக்கம் என்ற தமிழக பகுதி வருகிறது. இப்படி சுமார் 15கி.மீ சுற்றளவுக்குள் தமிழகம் மற்றும் ஆந்திர பகுதிகள் மாறி மாறி வருவதால் பல்வேறு பாதகங்கள் இருப்பதால் முழுவதும் தமிழ் பேசும் தங்களை தமிழகத்தோடு இணைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

ஆந்திர மாநிலம் பழவேற்காடு ஏரி மீனவர் சங்க நிர்வாகியான சிவாஜி இது பற்றி தெரிவிக்கையில் இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய உப்பு நீர் ஏரி பழவேற்காடு ஏரி ஆந்திர, தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களிலும் பாய்கிறது. இந்த பழவேற்காடு ஏரிக்குட்பட்ட ஆந்திரப் பகுதியில் தமிழ் பேசும் 8 மீனவ குப்பங்கள் உள்ளது. பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பது தொடர்பாக இந்த ஆந்திர வாழ் தமிழ் பேசும் மீனவர்களும், தமிழக மீனவர்களுக்கும் ஆண்டாண்டு காலமாக சண்டை நிலவி வருகிறது. இந்த மோதலில் உயிரிழப்பும் நிகழ்ந்துள்ளது.

ஒவ்வோராண்டும் இரு தரப்பினருக்கும் மீன் பிடி எல்லை தொடர்பாக பிரச்சனை நிலவும் போதெல்லாம் இரு மாநில அதிகாரிகளும் இந்த பிரச்சனையை தீர்க்க பெரிதும் சிரமப்பட்டு வரும் வேளையில், இந்த பிரச்சனை காரணமாக ஒரே மொழி பேசும், ஒரே இனத்தை சேர்ந்தவர்களாய் இவர்கள் இருந்தாலும், இரு மாநில மீனவ கிராமங்களுக்கிடையே கொடுக்கல், வாங்கல் இல்லை, உறவினர்களோடு சுமூக உறவும் இல்லை என்ற நிலையில்
மேற்கண்ட ஆந்திர பகுதிகளை தமிழகத்தோடு இணைக்கும் போது நெடுங்காலமாக நிலவி வரும் மீன் பிடி எல்லை தீரும் என்றார் சிவாஜி.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மேற்கண்ட 9 பகுதிகளை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தமிழக எல்லையோரத்தில் உள்ள தடா பகுதியில் கூடி ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்கள். மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்களை இணைத்து இந்த பகுதிகளை தமிழகத்தோடு இணைக்க ஆவண செய்யும்படி தமிழக, ஆந்திர மாநில அரசுகளை கேட்டுக்கொள்வதென இந்த கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது.

மேலும் இந்த பிரச்சனை குறித்து தமிழக முதல்வர் கருணாநிதி, மத்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் ஆகியோரை சந்தித்து பேச உள்ளதாகவும், தமிழகத்தை சேர்ந்த அனைத்து கட்சிகளையும் இந்த கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்க கோரி அவர்களை சந்திக்க உள்ளதாக வழக்கறிஞர் கிருஷ்ணன், நெல்லூர் மாவட்ட கவுன்சிலர் செல்வம் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment