Tuesday, June 30, 2009

இறந்தகால சுவட்டில்


நதிக்கரையோரங்கள் ....
அனாதை கால் தடங்கள் -முகவரிகளை
தேடினேன்...
ஒற்றை முகவரி கிடைத்தது- கால்
தடம் சென்றேன்..
முன்னோக்கி சென்றால் - நிகழ் காலம்
முகம் தொலைத்துள்ளது...
இறந்த காலம் சென்றேன்...
அங்கே...
இறந்தகால முகத்திற்கும்
நிகழ்கால முகத்திற்கும்
வித்யாசங்கள்...
ஒரே முகம் - இப்படியா
கால மாற்றத்தால் கண்டறிய
முடியாமல் போவது...
வித்யாசங்கள் படித்தேன் ...
இறந்தகாலம் படிக்கையில்
கண்ணீர் வடிகிறது...
நிகழ்காலம் தொலைத்தவைகளின்
நீளமான பட்டியல்களை
முன் நீட்டுகிறது...
இறந்த கால இனிப்பை உதட்டில்
ஒற்றி எடுக்கையில்...
நிகழ்கால கண்ணீர் கன்னம்
வழிந்தோடி உதட்டில் பட
கண் திறந்து
நதிக்கரை ஓரம் முன்னோக்கி
நடக்கிறேன்...

பிரச்சனைகளை சமாளியுங்கள்...


ஒரு எறும்பு தன்னை விட மூணு மடங்கு நீளமான ஒரு புல்லை தூக்கிகிட்டு போய்கிட்டிருந்தது. அது போகற பாதையில தண்ணி இருந்தது .. எறும்பால அந்த தண்ணியில எறங்க முடியாத நிலைமை...

அந்த எறும்பு தான் தூக்கிகிட்டு வந்த புல்லை பின்புறமா இருந்து அந்த தண்ணி மேல வெச்சது. இப்ப அந்த புல்லு தண்ணீர் மேல ஒரு பாலம் போல அமைஞ்சது..

எறும்பு அந்த புல்லு மேல நடந்து தண்ணிய கடந்து பத்திரமா அந்த பக்கம் போன பிறகு புல்லை இழுத்துக்கிட்டு போச்சு...

ஒரு ஐந்தறிவு பிராணியான எறும்பு அத விட பளுவான புல்லை தூக்கிகிட்டு , அது போகற வழில அதுக்கு தடையா தண்ணி இருந்தாலும், அதை சமாளிக்க முடியறபோது போது பிரச்சனைகளை சமாளிக்க மனுஷங்களால முடியாதா...

பிரச்சனை எனபது மனித வாழ்வில் எல்லா சமயங்களிலும் சந்திக்க கூடியது. பிரச்சனை நேர்ந்துவிட்டதே என்று துவண்டு போகாமல் அதை சமாளிக்கும் மன தைரியத்தை நாம வளர்த்துக்க வேணும்..

எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதற்கென ஒரு தீர்வு இல்லாமல் இல்லை. நாம் நம் வாழ்வில் ஏதாகிலும் பிரச்சனைகளை சந்திக்கும் போது நிதானமா யோசிச்சா கண்டிப்பா அந்த பிரச்சனைக்கு தீர்வு புலப்படும் ...

வாழ்க்கை எனபது ஒரு தடை தாண்டும் ஓட்டத்தை போன்றது.. ஐயோ நமக்கு முன் இவ்வளவு தடைகளா என்று நாம் கலங்கி நின்றால் நம் வாழ்க்கை நமக்கு எப்பவும் கசப்பானதாகவே இருக்கும். அதே சமயம் எத்தனை தடைகள் வந்தாலும் அது என்னை ஒன்றும் செய்யாது, என் முன் நிற்கும் தடை கற்களை உடைத்து என் வாழ்வின் வெற்றிக்கு படி கற்களாக மாற்றிக் கொள்வேன் என்ற உள்ள உறுதியை நாம் வளர்த்துக் கொண்டால் , நாம் நம் வாழ்வில் எந்த பிரச்சனைகளை சந்தித்தாலும் அதை சமாளிக்கும் பக்குவம் பெற்றவர்களாய் ஆவோம்...

என்னால் இது முடியாது, நான் இதிலிருந்து எப்படி மீள்வேனோ என்று அவ அவநம்பிக்கையோடு நாம் இருந்தால் பிரச்சனை என்னும் சூழலில் சிக்கி தவிப்பவர்களாய் நாம் ஆவோம்...

ஆகவே எந்த பிரச்சனை வந்தாலும் பயப்படாது, தன்னம்பிக்கையோடு யோசித்து நாம் செயல் பட்டால் நம்மால் பிரச்சனைகளை எளிதில் சமாளிக்க முடியும்.

மண்ணை ஓர் பிரச்சனையாக
நினைக்காமல் முட்டி மோதி
வெளியாகும் விதை...
அங்கே கற்கலாம் நாம் பிரச்சனைகளை
சமாளிக்கும் திறனை...
நீ கலங்கி நின்றால் உன்
வாழ்க்கை ஓர் போர்க்களம்
நீ சமாளித்து நின்றால் உன்
வாழ்க்கை ஓர் பூக்களம்....
ஆசை

என் குழந்தைக்கு
நிலவைக் காட்டி
சோறூட்ட ஆசை...
நிலவும் உள்ளது
சோறும் உள்ளது ...
ஆனால் குழந்தை...

Thursday, June 25, 2009

கவிதை பூக்கள்


பயணம்....
நாங்கள் பட்டங்களோடு வேற்று
கிரகம் செல்ல இருக்கிறோம்
வேலை தேடி...

நவீன காந்தி...
இவர்களும் ஒரு காந்தி
தான் - ஆடை குறைப்பில்
சினிமா நடிகைகள்...

தகராறு...
வீதியில் தகராறு - மனிதர்களுக்கும்
நாய்களுக்கும் - யார் ஜெயிப்பார்களோ
எச்சில் இலை எடுப்பதில்...

துஷ்யந்தர்கள்....
வாக்குறுதி கணையாழியை தந்துவிட்டு
தொக்தி சாகுந்தலையை கைவிட்ட
துஷ்யந்தர்கள்- அரசியல்வாதிகள்...

பொதி...
பொதி சுமக்கிறது
கழுதை அல்ல...
கான்வென்ட் குழந்தை...

ஓடி விளையாடு...
ஓடி விளையாடு பாப்பா
என்று உரக்க பாடுகிறார்கள்
போலியோ குழந்தைகள்...



Wednesday, June 24, 2009

விலைமாது....

பசியால் குடும்பம் படுக்காதிருக்க
இவள் படுக்கிறாள் -
ஒன்றை இழந்து ஒன்றை
பெறலாம் என்ற அறிவியல்
கருத்தை மெய்பிக்கும்
விஞ்ஞானி இவள்....

வணங்கா மண் கப்பல் வெளியேற்றம்


இலங்கையில் அவதிப் படும் நம் தமிழ் ரத்தங்களின் துயரினை காண பொறுக்காமல் உலக தமிழ் நல்லுள்ளங்கள் எல்லாம் இணைந்து உணவு , மருந்து பொருட்களை சேகரித்து இலங்கைக்கு கப்பலில் அனுப்பியது. அப்படி வந்த கப்பல் சில நாட்களாக சென்னை துறைமுகத்தில் எரிபொருள் வேண்டி அனுமதிக்காக காத்திருந்தது ...

இந்நிலையில் ஜூன்- 24 அன்று இந்திய கடற்படை வணங்கா மண் கப்பல் சந்தேகத்திற்கு இடமான கப்பல் என்று கூறி , வணங்கா மண் கப்பலை தமிழகத்திலுள்ள இந்திய கடல் எல்லைக்குள் இருந்து வெளியேற உத்தரவிட்டது.

வணங்கா மண் கப்பலில் அப்பாவி தமிழர்களுக்கு தர உணவு, மருந்து உட்பட 884 டன் அளவு நிவாரண பொருட்கள் மட்டும் தான் உள்ளது. இலங்கையில் போர் நடக்கும் பொது தான் தமிழ் மக்களை காப்பாற்ற இந்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போது கூட காப்பாற்ற மனம் இல்லையா...

விடுதலை புலிகளை முற்றிலுமாக அழித்து விட்டதற்கு பாராடுக்கள் என்று இலங்கை அரசுக்கு பாராட்டுரை கூறிய இந்திய அரசின் கூற்றுப்படி பார்த்தால் இலங்கையில் தற்போது இருப்பது அப்பாவி தமிழர்கள் தானே....

மனிதாபிமான அடிப்படையில் கூட இலங்கை தமிழர்களுக்கு உதவிட இந்திய அரசுக்கு மனம் இல்லையா... தமிழனை மனிதனாக நினைக்க கூடாத அளவு இந்தியாவிற்கு தமிழனின் மேல் என்ன கோவம்...

பாகிஸ்தானில் சரப்ஜித் சிங் தூக்கிலிடப்பட கூடாதென தூது மேல் தூது விடும் இந்திய அரசுக்கு தமிழனின் கண்ணீர் மட்டும் ஏன் கண்ணுக்கு தெரியாமல் போகிறது.... ஒரு உயிருக்கு (சரப்ஜித் சிங்) இவ்வளவு மதிப்பு உள்ளதென தெரிந்த உங்களால் பசியால் சாகும் பல நூறு தமிழ் மக்களின் உயிரின் மதிப்பு தெரிய வேண்டாமா .....

நெஞ்சு பொறுக்குதில்லையே
இந்த நிலை கெட்ட மாந்தரை
காண்கையிலே ....

Tuesday, June 23, 2009

நேர்த்தி கடனோ ?

ஐயனும் ஆத்தாளும்
ஆசை ஆசையா வளர்த்த
ஆட்டுகிடா அய்யனார்
கோவில் திருவிழாவுக்கு
பலியானது - நேர்ந்துகிட்டாங்கலாம்...

பொத்தி பொத்தி
வளர்த்த சேவல் கூட
பொசுக்கென முனீஸ்வரனுக்கு
வெட்டப்பட்டது - நேர்ந்துகிட்டாங்கலாம்...

கண்ணே மணியே என்று
வளர்த்த என்னையும்
குடிகார மனுஷனுக்கு
கட்டி வெச்சாங்க- நேர்ந்துகிட்டாங்களோ....

Sunday, June 21, 2009

தோற்றது இந்தியா

இலங்கையில் 30 ஆண்டுகளாக நடைபெற்ற போர் முடிவடைந்து விட்டது. விடுதலை புலிகளை நாங்கள் முற்றிலும் தோற்கடித்து விட்டோம் என்று இலங்கை அரசு அறிவித்ததற்கு இந்தியா அரசு தனது பாராட்டை தெரிவித்தது.

உண்மையில் விடுதலை புலிகளுடன் இலங்கை அரசு நடத்திய போரில் தோற்றது இந்திய அரசு தான் .

இந்த போருக்கு முன்னர் இதுவரை இந்திய அரசின் வாய் பேச்சுக்கு கட்டுப்பட்ட இலங்கை அரசு இப்போது இந்திய அரசின் முன் நெஞ்சை நிமிர்த்துக் காட்டுகிறது...

1993 ஆம் ஆண்டு இலங்கையில் காலே துறைமுகத்தில் சீனாவின் நோரிங்கோ ஆயுத நிறுவனம் பெரிய அளவில் ஆயுத கிடங்கை திறப்பதற்கு இலங்கையுடன் உடன்பாடு செய்தது.

இந்த உடன்பாட்டின் படி இலங்கை அரசு தனது ராணுவத்திற்கு ஆயுதங்களை வாங்க வேண்டும் என்றால் இந்த கிடங்கிலிருந்து தான் வாங்க வேண்டும். வேறு எந்த நாட்டிலிருந்தாவது ஆயுதங்களை வாங்க வேண்டும் என்றால் நோரிங்கோவின் அனுமதி வேண்டும்.

இந்த ஆயுத கிடங்கு அமைந்து இருப்பதால் தென் ஆசிய நாடுகளுக்கு தேவை படும் போது சீனா ஆயுதங்களை வழங்கும்... இதனால் இந்தியாவை நெருங்கிய ஆபத்துக்கு இந்திய அரசு தான் பதில் சொல்ல வேண்டும்...

2008 ஆம் ஆண்டில் இலங்கைக்கு சீனா வான் புலிகளின் தாக்குதலை கண்டறிய உதவும் நவீன ரேடாரை அளித்து . இந்த ரேடாரினால் விடுதலை புலிகளின் விமான நடமாட்டத்தை மட்டும் அல்ல இந்திய விமான படையின் நடமாட்டத்தை யும் சீனா உளவறிய வழி ஏற்பட்டு விட்டது.

அதே சமயம் 2008 ஆம் ஆண்டு இலங்கைக்கு சீனா 500 கோடி நிதி உதவி அளித்தது. 100 கோடி ஆயுத கடனை தள்ளுபடி செய்தது. சீனாவின் நட்பு நாடுகளான பாகிஸ்தான், ஈரான் இலங்கைக்கு உதவி செய்ய முன்வந்தது. 2006 ஆம் பாகிஸ்தான் இலங்கை அரசுக்கு 300 கோடி மதிப்பிலான ஆயுத உதவியை அளித்தது. இதற்கு பதிலாக பாகிஸ்தானுடன் இலங்கை வணிக உடன்பாட்டை செய்து கொண்டது.

சீனாவுடனும் அதன் கூட்டாளி நாடுகளுடன் நட்பாக இருந்தால் அவர்களின் ஆதரவை பெற்று விடுதலை புலிகளை வென்று விடலாம் என இலங்கை அரசு செயல்பட்டதை இந்திய அரசு கவனிக்க தவறி விட்டது.

ஒரு பக்கம் இந்தியாவின் பேச்சுக்கு தான் கட்டுபடுவதாக நடித்து கொண்டு விடுத்தலை புலிகளுக்கு எதிராக இந்திய அரசை செயல் பட விட்டு, இன்னொரு பக்கம் தென் கடல் பிராந்தியத்தில் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளை ஊடுருவவிட்டு இன்று இந்தியாவின் தென் கடல் பகுதிக்கு ஆபத்தை கொண்டு வந்த இலங்கை அரசின் நரித்தனத்தை இந்திய அரசு உணராமல் போய் விட்டது.

இப்படி விடுதலை புலிகளை அழிக்க இந்திய அரசின் உதவிகளை ஒரு பக்கம் பெற்று கொண்டே, மறு பக்கம் சீனா, பாகிஸ்தான் நாடுகளின் உதவியையும் இலங்கை பெற்று விடுதலை புலிகளை எதிர்த்து போரிட்டது.

ஈழ தமிழர்களுக்கு சமவுரிமை வழங்க வேண்டுமென எங்களுக்கு ஆணையிட இந்திய அரசுக்கு உரிமை இல்லை ஏகம் , இந்த அறிவுரையை தர இந்திய அரசுக்கு என்ன தகுதி இருக்கிறது என இலங்கை அரசின் பாதுகாப்பு ஆலோசகரான கோதபாய ராஜபக்ஷேவின் இணைய தளத்தில் கூறப்பட்டு உள்ளது. இந்த பேச்சு சீனா மற்றும் பாகிஸ்தானின் நட்பு இலங்கைக்கு உள்ளது என்ற இறுமாப்பில் வந்தது தான்.

இப்படி இலங்கையில் நடைபெற்ற போரில் விடுதலை புலிகள் தோற்றதாக தெரிந்தாலும் உண்மையில் தோற்றது இந்திய தான். இனி இந்தியாவின் பேச்சுக்கு இலங்கை கட்டுப் பட போவதில்லை - அதே சமயம் தென் கடல் பிராந்தியத்தில் சீனாவும் , பாகிஸ்தானும் இலங்கை அரசின் ஆதரவோடு இந்திய கடல் பகுதியை வேவு பார்க்கவும் ஆரம்பித்து விட்டது.

தென் கடல் பகுதியில் தனது பலத்தை உறுதி செய்திடும் நோக்கத்தில் , விடுதலை புலிகளை அழிக்க உதவுகிறோம் என்று சொல்லி பல விதங்களில் இலங்கை அரசுக்கு உதவிய இந்திய அரசு இப்போது சீனா, பாகிஸ்தானை தென் கடல் பகுதியில் இலங்கை அரசால் ஊடுருவ விட்டு வேடிக்கை பார்க்கிறது.

இனி இந்த இரண்டு நாடுகளையும் தென் கடல் பகுதியில் இந்திய சமாளிக்கவே நேரம் சரியாக இருக்கும் என்பதே உண்மை... ஆக தோற்றது விடுதலை புலிகள் இல்லை - இந்திய அரசு தான் ....