Sunday, June 21, 2009

தொலைந்த கணக்கில்

மழைக்கால நீரோட்டம்...
கால் நனைத்து குதிக்க ஆசை...

அம்மா பார்த்தால் முதுகில்
அடி விழும்...

வீதியில் வித்தை காட்டும்
கூட்டம் - பார்க்க ஆசை...

இங்கு உனக்கென்ன வேலை
வீட்டுக்கு போ - திட்டு விழும்..

சிறார்களோடு சொப்பு வைத்து
விளையாட ஆசை...

சீ சனியனே நீ என்ன
குழந்தையா - அதட்டல் வரும்...

காமெடி காட்சியை கண்டு சத்தம்
போட்டு சிரிக்க ஆசை...

அறிவு கெட்டவளே உனக்கே கேட்காதபடி
சிரிக்க கற்றுக்கொள் - அறிவுரை வரும்...

பக்கத்து வீட்டு அண்ணனிடம் பாடத்தில்
சந்தேகம் கேட்க ஆசை....

அங்கென்ன பேச்சு அடக்கமாய் நடக்க
தெரியாத- மிரட்டல் வரும்...

பாரதி கண்ட புதுமை பெண்ணாய்
நடந்திட ஆசை...

குனிந்த தலை நிமிராமல் நட- தலையில்
குட்டு விழும்...

நேற்று வரை நான் மகிழ்ந்தவைகளுக்கு
இப்போதெல்லாம் தடை...

நான் பூப்பெய்தி விட்டேனாம் ....

No comments:

Post a Comment