Wednesday, June 17, 2009

ஓர் இந்திய குடிசைக்குள்

சிறு கூட்டில் - நான்கைந்து
குஞ்சுகளுடம் வாழும்
காக்கை குடும்பம் போன்று...

ஓர் இந்திய குடிசை...

வந்தவர் யாரென்றாலும்
தலைகுனியச் செய்யும்
வாசற்படி...

கைத் தொடும் தூரத்தில்
ஆயிரம் கண்ணுடைய
மேற்கூரை....

அங்கே வானத்தின் இன்ப
தரிசனம்....

இரவினிலோ நிலவின் இலவச
மின்சாரம்....

கதவில்லா வீட்டுக்கு
காவலாய் எப்போதோ போட்ட
சோற்றிற்கு நன்றிக்கடன் செலுத்தும்
நோஞ்சான் நாய்...

பொக்கை வாய் கிழவனின்
முகம் போன்று ஆங்காங்கே
சொட்டை ஆகிப்போன
பித்தளை பாத்திரங்கள்....

சிக்கனமாய் ஒட்டுத் துணியோடு
பெரியவர்கள்... காந்தியை
நினைவு படுத்தி...

அண்டை வீட்டு குழந்தைகளின்
தபால் பெட்டியாகும் ஆடைகளுடன்
சிறுவர்கள்...

காலைக்கு கஞ்சி - பக்கத்து வீட்டு
அம்மாவின் புண்ணியத்தால்...

பகலுக்கு பள்ளிக்கு போகும்
பிள்ளை கொண்டு வரும்
அரசாங்க சத்துணவு....

பிய்ந்த கோணிகளே படுக்கைகள்
கரங்களே தலையனை....

வயதுக்கு வந்த பெண்கள் மட்டும்
படுக்க கூரைக்குள் இடம்...

தாயும் தந்தையும் வீதியில்
விதியை எண்ணி உறங்கியபடி...

மழை காலமென்றால்
உறங்கா இரவுகள்...

இருக்கும் கூரைக்குள் ஒரு
இயற்கை நீச்சல் குளம்...

கண்விழித்து தண்ணீரோடு விளையாடி
தவளைகளோடு கதை பேசி.....

தொடர் மழை என்றால் ஆபத்துக்கு
உதவும் நண்பனாய் அரசாங்க
பள்ளி....

எப்படியோ பிறக்கிறார்கள்... எப்படியோ
வாழ்கிறார்கள்...

ஓர் இந்திய குடிசை இது....
இதன் பின்னணியில்
ஒருகோடி மக்கள்....

No comments:

Post a Comment