Tuesday, July 6, 2010

குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு

குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு
குறித்த செய்தி படிக்கிறார்கள்...
தேனீர் கடையில் தேனீர் அருந்திக் கொண்டு...
தேனீர் தந்த சிறுவனோ சிரிக்கிறான்....

Monday, June 14, 2010

சுகம்

காத்திருப்பதை விட வலி வேறு
எதுவும் இல்லை...
நினைத்துக் கொண்டிருப்பதை விட வேறு
சுகம் எதுவும் இல்லை...
எனவே காத்திருக்கும் வலியை
மறக்கிறேன்...
உன்னை நினைக்கும் சுகத்தைக்
கொண்டு...
நீ வரும் வரை...

Monday, May 3, 2010

உயிர் பொருத்தம்

காற்றை பூசிக் கொள்ளும்
மரங்கள்...
பூவை புன்னகையாய்
தூவியபடி...
மழையை பூசிக் கொள்ளும்
வானம்...
மனதில் இசையை
மீட்டியபடி...
இரவை பூசிக் கொள்ளும்
விண்மீன்கள்...
நிலவை சுமந்து
சிரித்தபடி...
உன்னை பூசிக் கொள்ளும்
நான்...
உயிரில் உன்னை
சுமந்தபடி...

Sunday, May 2, 2010

அந்த  பக்கம்   இந்த பக்கம்
எந்த பக்கம் போவது...
திக்கு தெரியாத காட்டில்
மனம்..
நூல் சிக்கலில் மாட்டிக்கொண்ட
காற்றாடி போல..
அங்கும் இங்கும் பறக்கும்
மனம்...

Wednesday, January 6, 2010

மாத்திரை வடிவில் மிட்டாய்கள் - ஆபத்தை நெருங்கும் குழந்தைகள்

    தமிழகத்தின் பல்வேறு    பகுதிகளில் கிராமப்புற சிறுவர்கள் விரும்பி வாங்கி உண்ணும் மிட்டாய்கள் தற்போது மாத்திரைகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அட்டைகள் வடிவில் விற்கப்படுவதால் ஆபத்தின் விளிம்பில் சிறுவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.  

பகுதிகளில் பெட்டிக் கடைகளில் பல வகையான மிட்டாய்கள் விற்கப்படுகின்றன.  சிறுவர்களை கவர வேண்டும் என்பதற்காக பல வண்ணங்களில் பல்வேறு வடிவங்களில் மிட்டாய் தயாரிக்கும் நிறுவனங்கள் மிட்டாய்கள் தயாரித்து அதை கடைகளுக்கு விற்பதும், சிறுவர்களால் கவரப்பட்டு அந்த மிட்டாயை வாங்கி உண்பதும் தற்போது அதிகமாகி வருகிறது. 
 

இந்நிலையில் இந்த மிட்டாய்கள் நாம் மருந்துக் கடைகளில் காணும் மாத்திரைகள் அடைத்து வைக்கப்பட்டு இருக்கும் அட்டைகள் போன்று உள்ளது. இதை 2 வயது முதல் 7 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் அதிகமாக விரும்பி வாங்கி உண்கின்றனர். 

இப்படிப்பட்ட மிட்டாய்களை விரும்பி சாப்பிடும் குழந்தைகள் தங்களை அறியாமல் வீட்டில் நோயால் அவதிப்படுபவர்களின் உபயோகத்துக்காக வைக்கப்பட்டிருக்கும் மாத்திரைகளை மிட்டாய் என நினைத்து தின்று விடும் அபாயம் உள்ளது.  

நோய்களுக்கு நாம் உண்ணும் மாத்திரையும், சிறுவர்கள் திண்ணும் மிட்டாயும் ஒரே வடிவத்தில் இருப்பது பெரியவர்களால் இனம் கண்டு கொள்ள முடியும். ஆனால் சிறுவர்களால் அப்படி இனம் காண முடியாது.  எது மாத்திரை, எது மிட்டாய் என தெரியாமல் மாத்திரையை மிட்டாய் என நினைத்து தின்று விடும் அபாயம் உள்ளது. பெற்றோர்களும் குழந்தைகளுக்கு இம்மாதிரி மிட்டாய்களை அதிகம் வாங்கி கொடுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

 எனவே இது போன்று மாத்திரை வடிவில் மிட்டாய்கள் தயாரிப்பதை தடுத்து நிறுத்த அரசு ஆவன செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.
 

Monday, January 4, 2010

காகித ஆலைக் கழிவுகளால் மாசுபடும் ஏரிகள்: 1500 ஏக்கர் விவசாயம் பாதிப்பு


 






  

கும்​மி​டிப்​பூண்​டியை அடுத்த பூவ​லம்​பேடு ஊராட்சி அருகே உள்ள தனி​யார் காகித தொழிற்​சா​லை​க​ளின் கழி​வு​க​ளால் பூவ​லம்​பேடு ஏரி,​​ பெரிய புலி​யூர் ஏரி​கள் மாசு​ப​டு​கின்​றன.​ இத​னால்,​​ சுமார் 1500 ஏக்​கர் பரப்​ப​ள​வில் விவ​சா​யம் பாதிக்​கப்​பட்​டுள்​ள​தால் கிராம மக்​கள் கவ​லை​யில் உள்​ள​னர்.​ ​

கும்மி​டிப்​பூண்டி அடுத்த பூவ​லம்​பேடு ஊராட்​சி​யில் சுமார் 65 ஹெக்​டேர் பரப்​ப​ள​வி​லான ஏரியை நம்பி சுமார் 800 ஏக்​கர் விவ​சாய நிலங்​கள் உள்​ளன.​ அதே போல பூவ​லம்​பேட்டை ஒட்​டிய பெரி​யபு​லி​யூர் ஊராட்​சி​யில் 50 ஹெக்​டேர் பரப்
பள​வி​லான ஏரியை நம்பி சுமார் 750 ஏக்​கர் விவ​சாய நிலங்​கள் உள்​ளன.​ ​


இத​னி​டையே பூவ​லம்​பேடு பகு​தியை ஒட்டி ​ கடந்த 3 ஆண்​டு​க​ளுக்கு முன்​னர் அமைக்​கப்​பட்ட தனி​யார் காகித ஆலை​யின் கழி​வு​கள் கிணறு,​​ ஏரி​க​ளில் கலப்​ப​தா​கக் கூறி,​​ அதை எதிர்த்து பூவ​லம்​பேடு மற்​றும் பெரிய புலி​யூர் ஊராட்​சியை சேர்ந்த பொது​மக்​கள் தொடர்ந்து போராடி வரு​கின்​ற​னர்.​ ​

இந்​நி​லை​யில் இப் பகு​தி​யில் கடந்த 5 மாதங்​க​ளாக செயல்​பட்​டு​வ​ரும் மற்​றொரு காகித ஆலை​யின் கழி​வு​கள் பெரி​யபு​லி​யூர் ஏரி​யில் கலப்​ப​தால் அந்த ஏரி​யும் மாசு​பட்​டுள்​ளது.​ மேலும்,​​ அந்த ஏரி​யின் உபரி நீர் பூவ​லம்​பேடு ஏரி​யில் கலப்​ப​தால் அந்த ஏரி​யும் மாசு​பட்​டுள்​ளது.​

இ​து​கு​றித்து பூவ​லம்​பேடு பகு​தியை சேர்ந்த அசோ​கன் கூறி​ய​தா​வது:​ கடந்த 3 ஆண்​டு​க​ளாக இந்த இரு ஆலை​க​ளின் கழி​வு​க​ளால் மேற்​கண்ட 2 ஏரி​க​ளி​லும் மாசு ஏற்​பட்​டுள்​ள​தால் இப்​ப​கு​தி​யில் விவ​சா​யம் கேள்​விக்​கு​றி​யாக உள்​ளது.​ இது​கு​றித்து புகார் மனுக்​கள் தமி​ழக முத​ல​வர் மற்​றும் ஆட்​சி​யர் உள்​ளிட்ட உயர் அதி​கா​ரி​க​ளுக்கு அனுப்​பி​வைக்​கப்​பட்​டுள்​ளது என்​றார்.​ 

பூ​வ​லம்​பேடு ஊராட்சி துணைத் தலை​வர் ரவி​சங்​கர் கூறி​யது:​ இது​கு​றித்து ஆலை நிர்​வா​கத்​தி​டம் கேட்ட போது,​​ ஆலை​யில் தேக்​கி​வைக்​கப்​பட்​டி​ருந்த கழிவு நீர் மழை​யின் கார​ண​மாக வெளி​யேறி ஏரியை அடைந்து விட்​ட​தாக தெரி​வித்​த​னர் என்​றார்.​

பூ​வ​லம்​பேடு பகு​தியை சேர்ந்த சுந்​த​ர​வ​டி​வேலு கூறு​கை​யில்,​​ கடந்த 5 ஆண்​டு​க​ளுக்கு முன்​னர் இங்​குள்ள ஏரி​க​ளில் விரால்,​​ கட்லா உட்​பட பல வகை மீன்​க​ளும்,​​ பெரிய வகை இறால்​க​ளும் இருந்​தன.​ சுமார் 7 கிலோ எடை​யுள்ள மீன்​கள் கூட மேற்​கண்ட ஏரி​யில் இருந்த நிலை​யில்,​​ காகித ஆலை​க​ளின் கழி​வு​கள் மேற்​கண்ட ஏரி​யில் கலந்​த​தன் கார​ண​மாக ஏரி நீர் மாச​டைந்து மீன்​க​ளின் வளர்ச்சி பாதிக்​கப்​பட்​டுள்​ள​தோடு,​​ இறால் இன​மும் அழிந்​துள்​ளது.​ மேலும்,​​ மீன்​க​ளின் தோலில் சொறி நோய் போல காணப்​ப​டு​கி​றது என்று குற்​றஞ்​சாட்​டி​னார்.​ ​

1 ஏக்​க​ருக்கு 30 மூட்டை நெல் விளைந்த இந்த பூமி​யில் கடந்த 2,​ 3 ஆண்​டு​க​ளாக 1 ஏக்​க​ரில் 15 மூட்டை நெல் மட்​டுமே விளை​கி​றது என்​றும்,​​ நெல்​ப​யிர் முளைத்த 15 நாளி​லேயே சாயந்​து​வி​டு​கி​றது என்​றும் பச்​சை​யப்​பன் குற்​றஞ்​சாட்​டி​னார்.​

தனி​யார் தொழிற்​சாலை அருகே விவ​சா​யம் செய்து வரும் தேர்​வாய் பகு​தியை சேர்ந்த சீனி​வா​ச​னின் நிலத்​தை​யொட்டி உள்ள கிணற்​றின் அருகே ஆலை கழிவு தேக்கி வைக்​கப்​ப​டு​கி​றது.​ இதன் கார​ண​மாக அவ​ரது தோட்​டத்​தில் இருந்த மாஞ்​செடி,​​ விவ​சாய பயிர் பாதிப்​ப​டைந்​தது.​ முன்​னர்,​​ குடி​நீர் போல இருந்த கிணற்று நீர் தற்​போது எந்​த​வித பயன்​பா​டும் இன்றி உள்​ளது.​ இது​தொ​டர்​பாக அந்த ஆலை​யின் உயர் அதி​கா​ரி​க​ளுக்கு புகார் அனுப்​பி​வைக்​கப்​பட்​டுள்​ளது.​

இ​தே​போல ஆலைக் கழி​வால் பாதிக்​கப்​பட்ட பெரி​யபு​லி​யூர் பகு​தி​யைச் சேர்ந்த துரை என்​ப​வர் சென்னை உயர்​நீதி மன்​றத்​தில் தொடர்ந்​துள்ள வழக்கு கடந்த 2 ஆண்​டு​க​ளாக நடை​பெற்று வரு​கி​றது.​ இத​னி​டையே,​​ ஆலை​க​ளுக்கு சொந்​த​மான இடங்​க​ளில் கொட்​டப்​ப​டும் கழி​வு​கள் மழை பெய்​வ​தால் பெருக்​கெ​டுக்​கும் மழை நீரோடு சேர்ந்து ஏரி​க​ளில் கலந்​து​வி​டு​வ​தாக பெரி​யபு​லி​யூர் பகுதி மக்​கள் குற்​றஞ்​சாட்​டு​கின்​ற​னர்.​

Sunday, December 20, 2009

தமிழ்நாட்டோடு எங்கள் பகுதிகளை சேர்த்துக் கொள்ளுங்கள் எல்லையோர 9 ஆந்திர பஞ்சாயத்தினர் கோரிக்கை


கும்மிடிப்பூண்டி அடுத்த தமிழக எல்லையோரத்தில் உள்ள ஆந்திரப் பகுதிகளான ராமாபுரம், பெரியவேடு, பீமார்பாளையம்,காரூர், பூண்டி, தடா, தடா கண்டிகை, இருக்கம், வேநாடு போன்ற பஞ்சாயத்துகளை சேர்ந்தவர்கள் தாங்கள் ஆந்திராவில் இருந்தாலும், இப்பகுதியில் உள்ள அனைவரும் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் என்பதால் தங்களை தமிழகத்தோடு இணைத்துக் கொள்ளும்படி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தை பிரித்து தெலுங்கானா என்ற தனி மாநி்லமாக பிரிக்க வேண்டும் ஒரு சாராரும், பிரிவினை கூடாது என்று மற்றொரு பிரிவினரும் ஆந்திராவில் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் தமிழக எல்லையோரத்தில் உள்ள ஆந்திர பகுதியில் உள்ள 9 பஞ்சாயத்தினர் ஆந்திராவில் தெலுங்கை தாய்மொழியாக பேசும் ஒரு பிரிவினரே தனி மாநி்லம் கேட்கும் போது தமிழை தாய்மொழியாக கொண்ட தங்களை தமிழகத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற தங்களின் நியாயமான கோரிக்கையை இரு மாநில அரசுகளும் ஏற்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பியுள்ளனர்.

இது குறித்து வழக்கறிஞரும் ஆந்திர பகுதியான ராமாபுரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் வி.என்.கிருஷ்ணனை தெரிவிக்கையில் மேற்கண்ட 9 பகுதியிலும் 100 சதவீதம் சுமார் 30 ஆயிரம் தமிழர்கள் வசித்து வருகின்றனர். மேற்கண்ட பகுதிகள் வேங்கடகிரி அரசரின் சமஸ்தானத்தை சேர்ந்தாக இருந்த வரை இப்பகுதிகள் தற்போதைய திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த பொன்னேரியை தாலுக்காவாக கொண்டிருந்தது. 1956ஆம் ஆண்டு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது மேற்கண்ட தமிழ் மொழியை பேசும் பகுதிகள் இப்பகுதி மக்களின் விருப்பத்திற்கு மாறாக வேங்கடகிரி அரசரின் விருப்பத்தின் பேரில் ஆந்திராவோடு இணைக்கப்பட்டது.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கண்ட பகுதிகள் ஆந்திர மாநிலத்தை சேர்ந்ததாக இருந்தாலும் நாங்கள் அனைவரும் தமிழை தாய்மொழியாக கொண்டிருக்கிறோம். எங்கள் உற்றார் உறவுகள் அனைவரும் தமிழக பகுதியிலேயே தான் இருக்கும் நிலையில் நாங்கள் மட்டும் ஆந்திராவில் இருந்து அவதிப்படுகிறோம். தமிழக பகுதிகளுக்குள் தான நாங்கள் பெண் கொடுத்து பெண் எடுக்கிறோம், நாங்கள் அனைவரும் இன்றளவும தமிழ் நாட்டு பளளி, கல்லூரிகளில் தான் படித்து வருகிறோம். இப்படி தமிழகத்தோடு எல்லாவிதத்திலும் சம்பந்தப்பட்டு நாங்கள் இருந்தாலும் ஆந்திர மாநிலத்தவர் என்று நாங்கள் பிரிக்கப்படுவதோடு நாங்கள் இங்கு எல்லா விதங்களிலும் பின்தங்கி உள்ளதால் எங்களை தமிழகத்தோடு இணைத்துக் கொள்ள தமிழக அரசு ஆந்திர அரசை கேட்டுக் கொள்ள வேண்டும் என்றார்.

நெல்லூர் மாவட்ட கவுன்சிலரான பூண்டி பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் கூறுகையில் மேற்கண்ட 9 பஞ்சாயத்துகளை சேர்ந்த பெரும்பான்மையானவர்களுக்கு தமிழில் மட்டுமே பேச,எழுத தெரியும். தமிழக கல்லூரியி்ல் எம். படித்த பட்டாதாரியால் அவருக்கு தேவைப்படும் ஒரு சான்றிதழுக்காக ஆந்திர தாலுக்கா அலுவலகத்தில் விண்ணப்பிக்க தெரியாது.

அதே போல இங்கு பஞ்சாயத்து தலைவராகவும், மாவட்ட கவுன்சிலர்காவும் பதவி வகிக்கும் அனைவருக்கும் தெலுங்கு எழுத, படிக்க தெரியாததால் அரசு சார்பாக திட்டங்களை மக்களிடம் விளக்கவோ, கூட்டங்களில் அதிகாரிகள் என்ன கூறுகிறார்கள் என்பதை அறியாதவர்களாய் இருக்கிறார்கள். இதனால் அதிகாரிகள் அளவிலான கூட்டங்களில் மேற்கண்ட பகுதிகளை சோ்ந்த மக்கள் பிரதிநிதிகள் அவமானங்களை சந்திக்க நேர்கிறது. எனவே மேற்கண்ட பகுதிகளை தமிழகத்திலேயே சேர்ப்பது குறித்ததான தங்களின் கோரிக்கைக்கு தமிழகத்தை சேர்ந்த அனைத்து கட்சிகளையும் சேர்ந்தவர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றார்.

ராமாபுரம் பகுதியை சேர்ந்த ராமர் கோவில் தர்மகர்தாவான பட்டதாரி ராகவன் இது குறித்து தெரிவிக்கையில் ஆந்திரப்பகுதிகளான இங்கு தெலுங்கு பள்ளிகள் இருந்தாலும் அதிகமாக யாரும் படிப்பதில்லை சுமார் 4000 மக்கள் தொகை கொண்ட ராமாபுரத்தி்ல் 1-7 வகுப்புகள் வரை உள்ள தெலுங்கு பள்ளிக்கூடத்தில் வெறும் 50 மாணவர்களும், பீமளவாரிபாளையம் பள்ளியில் 1-7 வகுப்புகளில் 60 மாணவர்களும், 6000 மக்கள் தொகை கொண்ட காரூர் பள்ளியில் 40 மாணவர்களும் படித்து வரும் நிலையில், பனங்காடு,பெரியவேடு பகுதிகளில் மாணவர்கள் இன்மை காரணமாக தெலுங்கு பள்ளிகள் மூடப்பட்டன என்றார்.

மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆரம்பாக்கம், மாதர்பாக்கம், கும்மிடிப்பூண்டி, கவரப்பேட்டை, பொன்னேரி பகுதிகளில் பள்ளிக் கல்வியையும், பொன்னேரி, சென்னைப் பகுதியில் கல்லூரி கல்வியையும் கற்கின்றனர். ஆனாலும் தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு அதற்குரிய சான்றிதழ் ஆந்திராவில் வழங்கப்படாததால் தமிழக பள்ளிகளில் மாணவர்களுக்கு உரிய சலுகைகள் பெற முடிவதில்லை, அதே போல தெலுங்கு பள்ளிகளில் தமிழை ஒரு பாடமாக வைக்க தாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் ஆந்திரா கல்வி துறையால் நிறைவேற்றப்படவில்லை என்று வேதனைப்பட்டார் ராகவன்.

சென்னையில் முதுகலை பட்டப் படிப்பு முடித்த காரூர் பகுதியை சேர்ந்த நீலகண்டன் தெரிவிக்கையில் மேற்கண்ட பகுதிகளில் தமிழக கல்லூரிகளில் படித்த 100க்கும் மேற்பட்ட பட்டாதாரிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு தெலுங்கு பேச, எழுத தெரியாத காரணத்தால் அவர்களுக்கு ஆந்திராவில் அரசு வேலை கிடைப்பதில்லை. தமிழகத்திலும் அவர்கள் ஆந்திர மாநிலத்தவர்களாக பாவிக்கப்படுவதாலும் இங்கும் வேலை வாய்ப்பு மறுக்கப்படுவதால் வேலை வாய்ப்பின்றி இந்த பட்டதாரிகள் இரு தலைக் கொள்ளி எரும்பாய் தவிக்கின்றனர் என்றார்.

தடா பகுதியை சேர்ந்த முன்னாள் மாவட்ட கவுன்சிலரான உத்தண்டி சுப்பிரமணியம் குறிப்பிடுகையில் மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது மேற்கண்ட 9 ஊராட்சிகளை சேர்ந்த சுமார் 25க்கும் மேற்பட்ட தமிழ் பேசும் மக்களை கொண்ட கிராமங்களை ஆந்திராவோடு இணைத்து இம்மக்களுக்கு அநீதி இழைத்துள்ளனர். இன்று அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில், கல்வி, வேலை வாய்ப்பு என்ற அனைத்து வழிகளிலும் சிரமப்படும் தங்களின் நிலை மாற மேற்கண்ட பகுதிகளை தமிழகத்தோடு இணைத்துக் கொள்ள வேண்டும், அதற்கு மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும் என்றார்.

பீமளாவாரிபாளையம் பஞ்சாயத்து தலைவரான மனோகரன் தெரிவிக்கையில் சென்னையை தாண்டி கும்மிடிப்பூண்டி அடுத்து எளாவூரை தாண்டியதும் சுமார் 6 கி.மீ தொலைவுக்குள் பனங்காடு, ராமாபுரம், பெரியவேடு, வெங்கடாதிரி பாளையம் போன்ற ஆந்திர பகுதிகள் வந்து அதனை தாண்டினால் ஆரம்பாக்கம் என்ற தமிழக பகுதி வருகிறது. இப்படி சுமார் 15கி.மீ சுற்றளவுக்குள் தமிழகம் மற்றும் ஆந்திர பகுதிகள் மாறி மாறி வருவதால் பல்வேறு பாதகங்கள் இருப்பதால் முழுவதும் தமிழ் பேசும் தங்களை தமிழகத்தோடு இணைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

ஆந்திர மாநிலம் பழவேற்காடு ஏரி மீனவர் சங்க நிர்வாகியான சிவாஜி இது பற்றி தெரிவிக்கையில் இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய உப்பு நீர் ஏரி பழவேற்காடு ஏரி ஆந்திர, தமிழ்நாடு ஆகிய இரண்டு மாநிலங்களிலும் பாய்கிறது. இந்த பழவேற்காடு ஏரிக்குட்பட்ட ஆந்திரப் பகுதியில் தமிழ் பேசும் 8 மீனவ குப்பங்கள் உள்ளது. பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பது தொடர்பாக இந்த ஆந்திர வாழ் தமிழ் பேசும் மீனவர்களும், தமிழக மீனவர்களுக்கும் ஆண்டாண்டு காலமாக சண்டை நிலவி வருகிறது. இந்த மோதலில் உயிரிழப்பும் நிகழ்ந்துள்ளது.

ஒவ்வோராண்டும் இரு தரப்பினருக்கும் மீன் பிடி எல்லை தொடர்பாக பிரச்சனை நிலவும் போதெல்லாம் இரு மாநில அதிகாரிகளும் இந்த பிரச்சனையை தீர்க்க பெரிதும் சிரமப்பட்டு வரும் வேளையில், இந்த பிரச்சனை காரணமாக ஒரே மொழி பேசும், ஒரே இனத்தை சேர்ந்தவர்களாய் இவர்கள் இருந்தாலும், இரு மாநில மீனவ கிராமங்களுக்கிடையே கொடுக்கல், வாங்கல் இல்லை, உறவினர்களோடு சுமூக உறவும் இல்லை என்ற நிலையில்
மேற்கண்ட ஆந்திர பகுதிகளை தமிழகத்தோடு இணைக்கும் போது நெடுங்காலமாக நிலவி வரும் மீன் பிடி எல்லை தீரும் என்றார் சிவாஜி.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மேற்கண்ட 9 பகுதிகளை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தமிழக எல்லையோரத்தில் உள்ள தடா பகுதியில் கூடி ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்கள். மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்களை இணைத்து இந்த பகுதிகளை தமிழகத்தோடு இணைக்க ஆவண செய்யும்படி தமிழக, ஆந்திர மாநில அரசுகளை கேட்டுக்கொள்வதென இந்த கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது.

மேலும் இந்த பிரச்சனை குறித்து தமிழக முதல்வர் கருணாநிதி, மத்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் ஆகியோரை சந்தித்து பேச உள்ளதாகவும், தமிழகத்தை சேர்ந்த அனைத்து கட்சிகளையும் இந்த கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்க கோரி அவர்களை சந்திக்க உள்ளதாக வழக்கறிஞர் கிருஷ்ணன், நெல்லூர் மாவட்ட கவுன்சிலர் செல்வம் தெரிவித்தனர்.

அகதிகள் முகாமின் அவலம்.

















சென்னைக்கு
அருகேயுள்ள கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் குடிநீர், சுகாதாரம், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசிதிகள்கூட இல்லாத நிலையில் பெரிதும் அவதிப்படுகின்றனர் அங்கு வசிக்கும் இலங்கைத் தமிழர்கள்.

தமிழகத்தின் மிகப் பெரிய முகாமாக 1990-ல் தொடங்கப்பட்ட இம் முகாமில் 1000 குடும்பங்களைச் சேர்ந்த 3,947 பேர் வசித்த போதும் அவர்களுக்கு எந்தவித வசதிகளும் முறையாக செய்துதரப்படவில்லை.

முகாம் தொடங்கிவைக்கப்பட்ட போது, அரசால் கட்டிக் கொடுக்கப்பட்ட 500 குடியிருப்புகள் 5 ஆண்டுகளுக்குள் முற்றிலும் சேதமடைந்துவிட்டன. அதற்கு பிறகு அவற்றைச் சீரமைக்கவோ, புதிதாகக் குடியிருப்புகள் கட்டவோ எந்தவித முயற்சியையும் அரசு மேற்கொள்ளவில்லை.

இதனால், இங்குள்ளவர்கள் தங்களது சொந்த செலவிலேயே குடிசைகளை புதுப்பித்துக் கொண்டனர்.

ஈழ ஏதிலியர் மறுவாழ்வு சங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட பள்ளியில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை 514 குழந்தைகள் படித்து வந்தபோதும் அரசுத் தரப்பில் இப் பள்ளிக்கு எவ்வித உதவியும் இல்லை. இம் முகாமில் 12-ம் வகுப்பு வரை படித்த 12 இளைஞர்கள் மாதம் ரூ.500 ஊதியத்தில் ஆசிரியர்களாகப் பணிபுரிகின்றனர்.

இப் பள்ளியை அரசு தனது பொறுப்பில் ஏற்றுக்கொண்டால், குழந்தைகளுக்கு மதிய உணவு, இலவசப் புத்தகம் உள்ளிட்ட அரசின் சலுகைகள் அனைத்தும் கிடைப்பதோடு, நிரந்தர ஆசிரியர்கள் மூலம் தரமான கல்வியும் கிடைக்கும் என்றார் முகாமைச் சேர்ந்த சாந்தி.

முகாமில் உள்ள 5 ஆழ்துளை கிணறுகளில் 2 பழுதடைந்துள்ளன. மேலும், மின்விநியோகமும் அடிக்கடி தடைபடுவதால் குடிநீர் சீராக வருவதில்லை என்றும், இரவு 8 மணிக்குமேல் தான் குடிநீரைப் பெறும் நிலை உள்ளதாகவும் வருத்தப்படுகிறார் கண்ணன்.

குண்டும், குழியுமான சாலைகள் சீரமைக்கப்படவில்லை. சாலையோரங்களில் திறந்தவெளி சாக்கடை காணப்படுவதால் மழைக் காலங்களில் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:

""முகாம் பகுதியில் மின்கோளாறை சீரமைக்க கூடுதலாக மின்மாற்றி அமைக்க ரூ.70,000 மின்வாரியத்துக்கு செலுத்தவேண்டியுள்ளது. இதற்கு ஆவன செய்ய மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. விரைவில் இதற்கு தீர்வு காணப்படும்'' என நம்பிக்கை தெரிவித்தார்.

"அத்திப்பூ பூத்தாற் போல மின்விநியோகம்'

""மின்விநியோகமும் அத்திப்பூ பூத்தாற் போல எப்போதாவதுதான் வரும்; மாலையில் மண்ணெண்ணெய் விளக்குகள்தான் எங்கள் வீடுகளில் நிரந்தரத் துணை என்கின்றனர்'' இங்குள்ள மக்கள்.

இரவு நேரத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பெரிதும் பாதிக்கப்படுவதாக இளைஞர் மூர்த்தி தெரிவிக்கிறார்.

2 மாதங்களுக்கு முன்னர் புதிதாக மின் கம்பம் நட்டு, மின்மாற்றி நிறுவப்பட்ட போதும், இதுவரை இணைப்பு கொடுக்கப்படவில்லை என, முகாமைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.